மாலைதீவு அரசாங்கத்துக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை இலங்கை வங்கி வழங்கியுள்ளது. இலங்கையின் பழ மற்றும் மரக்கறி ஏற்றுமதித் துறையை ஊக்குவிக்கும் வகையிலேயே இந்தக் கடனுதவி மாலைதீவுக்கு வழங்கப்பட்டிருப்பதாக இலங்கை வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்ரமசிங்க தெரிவித்தார்.
மாலைதீவிலுள்ள ஹோட்டல் துறையினர் இலங்கையிலிருந்து பழவகைகள் மற்றும் மரக்கறி வகைகளை தமது நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கே இந்தக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் இலங்கை வங்கித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவல்களை வழங்கினார்.
இக்கடனுதவி தொடர்பான ஒப்பந்தப் பரிமாற்றம் கடந்த 18ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது. மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நஷீட் மற்றும் இலங்கை வங்கித் தலைவர் கலாநிதி காமினி விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் பரிமாறப்பட்டது. (எம்.ரி.-977)
