தலைமைத்துவம் என்ற தொனிப் பொருளில் உயர்கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ள இரண்டாவது பயிற்சிப் பாசறை
இன்று ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தலைமையில் அங்குரார்ப் பணம் செய்து வைக்கப்படும்.
நாட்டில் உள்ள சகல பல்கலைக்கழகங்களின் சிரேஷ்ட பட்டதாரி மாணவர்களுக்கும் தலைமைத்துவப் பயிற்சியை வழங்கும் நோக்குடன் இந்தப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டு;ள்ளது.
இதற்கு முன்னர் பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக சேர்த்துக் கொள்ளப்படும் 22 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சி சில மாதங்களுக்கு முன்னர் வெற்றிகரமாக உயர்கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பயிற்சியை முடித்துக் கொண்ட மாணவர்கள் ஒக்டோபர் மாதத்தில் தங்கள் பல்கலைக்கழக கல்வியை ஆரம்பிக்கவுள்ளார்கள். புதிய மாணவர்களுக்காக ஆரம்பித்த தலைமைத்துவ பயிற்சி பாடநெறியில் இந்தத் தடவை சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் பெற்று சமூகத்தில் சங்கமிக்கும் இளைஞர் யுவதிகளுக்கு நாட்டை முன்னெடுத்துச் செல்லும் தலைமைத்துவத்தை பெற்றுக் கொடுப்பதே இதன் குறிக்கோளாகும்.
தொழில் ஸ்தாபனங்களை ஆரம்பித்து நிர்வகிக்கும் திறமை இந்த பட்டதாரிகளுக்கு பெற்றுக் கொடுப்பதும் இதன் குறிக்கோள்களில் ஒன்றாகும். இதன் மூலம் ஒரு பட்டதாரி சமூகத்தில் தொழிலற்றவர்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுத்து எமது நாட்டின் இளம் சந்ததியினரை அரசியல்வாதிகளிடம் சென்று தொழில்வாய்ப்பை பெற்றுக் கொடுங்கள் என்று கையேந்தி நிற்கும் நிலையை இல்லாமல் செய்வதே இந்த தலைமைத்துவ பயிற்சியின் நோக்கங்களில் ஒன்றாகும்.
பயிற்சி பெறும் முதல் 500 மாணவர்களுக்கென ஐந்து நாள் பயிற்சி பாசறையொன்று நடத்தப்படுமென்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் காமினி சமரநாயக்க கூறினார். இதையடுத்து ஏனையோருக்கும் தலா 5 நாள் பயிற்சி அளிக்கப்படும்.
இலங்கையை ஆசியாவின் விந்தைக்குரிய நாடாக மாற்ற வேண்டுமாயின் எங்கள் நாட்டில் தொழில்வாய்ப்பை உருவாக்கக்கூடிய இளைஞர்களின் தலைமைத்துவத்தை ஏற்படுத்துவது அவசியமென்று அவர் மேலும் தெரிவித்தார்.(எம்.ரி-977)
