ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கமைய வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளத்தை வட்டியில்லாக் கடனாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இக்கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்த பொதுநிர்வாக அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பீ. பி. அபேகோன் தெரிவித்தார்.
இது தொடர்பில் விசேட சுற்றறிக்கையொன்றை அமைச்சு வெளியிட்டுள்ளதுடன் சகல அமைச்சுக்கள் திணைக்களங்களினதும் செயலாளர்கள் மாகாண சபைகளின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுக்கும் இச் சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
வட்டியில்லாக் கடனாக வழங்கப்படும் மூன்று மாத கால சம்பளப் பணத்தை பத்து மாத காலத்துக்குள் மீள அறவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளர்களுக்கூடாக பாதிக்கப்பட்ட அரச ஊழியர்கள் இக்கடனைப் பெற்றுக்கொள்ள முடியும். பிரதேச செயலாளர்களின் சிபாரிசுக்கமைய கடன் பெற தகுதியானோர் தெரிவு செய்யப்படுவர். (எஸ்.டி.ம்.ஐ.10.30)
