வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைக் கட்டியெழுப்பும் வகையில் ஜனாதிபதி செயலணியொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று ஜனாதிபதி தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்களின் வாழ்க்கையை இயல்புநிலைக்குக் கொண்டுவருவதற்கும் அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய பிரதேசங்களை கட்டியெழுப்பும் வகையிலும் இந்தச் செயலணி செயற்படும். இந்த செயலணி தொடர்புபட்ட எல்லா அமைச்சுக்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியிருக்கும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் மேலும் 70 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளது. வெள்ளம் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள எவரையூம் ஒரு வேலையேனும் உணவின்றி வாழ இடமளிக்கக்கூடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவுறுத்தல் வழங்கியூள்ளார். அதற்கேற்ப நிவாரண நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளம் மண்சரிவு காரணமாக நாட்டில் பல பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நேற்று நண்பகல் வரையில் வெள்ளம் மண்சரிவு காரணமாக 18 மாவட்டங்களில் 32230 குடும்பங்களைச் சேர்ந்த 1223052 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர்கள் மரணமடைந்திருப்பதாகவும் மேலும் 03 பேர் காணாமல் போயூள்;ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 311281 பேர்கள் இடம்பெயர்ந்து அரசாங்கத்தினால் பராமரிக்கப்படும் 744 தற்காலிக இருப்பிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பாரிய தொற்று நோய்கள் எதுவும் இதுவரையில் பரவவில்லை என சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளதோடு இந்த பிரதேசங்களில் அமைச்சு தீவிர கண்காணிப்பு செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.(எம்.ரி.977)
