வடக்கு மக்கள் பதிவு இடைநிறுத்தம்!

HHcc

சட்டமா  அதிபர்  இணக்கம்

வடக்கில் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் மக்கள் பதிவு நடவடிக்கையை உடன்  அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த  சட்டமா அதிபர் இணக்கம் தெரிவிதுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களால்  தாக்கல் செய்யப்பட்ட  மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமாஅதிபர் சார்பாக உயர் நீதிமன்றத்தில் இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

பதிவு செய்யும் நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு பொருத்தமான முறையொன்றினை ஒழுங்கு செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக சட்ட மாஅதிபர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான பிரதி சொலிசிடர் ஜெனரல் புவனெக்க அலுவிஹார உயர்  நீதிமன்றத்திடம் இணக்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை பதிவு செய்வதன் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே பிரதி சொலிசிடர் ஜெனரல் சட்டமாஅதிபர் சார்பாக இணக்கம் தெரிவித்தார்.

உயர்  நீதிமன்ற நீதியரசர்களான  நிமல் காமினி அமரதுங்க  பீ. ஏ. ரத்நாயக்க   சந்திரா ஏக்கநாயக்க ஆகியோர்  முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் களான மாவை சேனா திராஜா  கே. பிரேமசந்திரன்  அப்பாத்துரை விநாயகமூர்த்தி  ஈ. சரவணபவன்  எஸ். ஸ்ரீதரன் ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ  யாழ்ப்பாண கட்டளைத் தளபதி  இராணுவ பேச்சாளர்  யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் மற்றும் சட்டமாஅதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டிருந்தனர். (எஸ்.டி.எம்.ஐ.09.30)