அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் 16 ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம்!

GLP

சர்ச்சைக்குரிய ஐ.நா அறிக்கையிலிருந்து நாட்டைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எதிர்வரும் 16 ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்து வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அறிக்கை குறித்து சர்வதேசத்துக்கு தெளிவுபடுத்த அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுவருவதுடன் சர்ச்சைக்குரிய ஐ.நா அறிக்கையிலிருந்து நாட்டைக் காப்பாற்றிக்கொள்ள சர்வதேச நாடுகளின் உதவியினை கோரவுள்ளது.

மேலும் இது தொடர்பில்- தமிழர்கள் குறித்து குரல் கொடுக்கும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவே  வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எதிர்வரும் 16ம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.  
மத்திய அரசின் முக்கிய அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதேவேளை- எதிர்வரும் 24 ஆம் திகதி சீனத் தலைநகரான பீஜிங்கிற்கு விஜயம் செய்து சீன வெளிவிவகார அமைச்சருடனும் ஜீ.எல்.பீரிஸ் கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன்இ எதிர்வரும் 26- 27 ஆம் திகதிகளில் இந்தோனேஷிய பாலி நகரில் இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

இதன்போது பலநாட்டு வெளிவிவகார அமைச்சர்கள் வரவுள்ளதாகவும் இலங்கையின் நிலைப்பாடு மற்றும் ஐ.நா அறிக்கை குறித்து சர்வதேசத்திற்கு தெளிவுபடுத்த இதுவொரு சிறந்த களமாக அமையுமெனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.(எம்.ரி.௯77)