லக்ஷ்மண் ஹுலுகல்ல அறிவிப்பு
யுத்தகுற்றம் தொடர்பில் பிரிட்டனின் செனல் 4இல் காண்பிக்கப்பட்ட வீடியோ போலியானது என்று தாங்கள் ஏற்கெனவே நிரூபித்துவிட்டதால்- அது தொடர்பில் புதிய விசாரணைகள் தேவையில்லை என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையத்தின் இயக்குனர் கலாநிதி லக்ஷ்மண் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான முக்கிய ஆவணமாக கருதப்படும் சேனல் 4இல் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகள் உண்மையானவை என்றும்- அது குறித்து இலங்கை அரசு மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்புத் தூதர் விடுத்த அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் கலாநிதி லக்ஷ்மண் ஹூலுகல்ல மேலும் தெரிவிக்கையில்-
இந்த பரிந்துரையை இலங்கை அரசு ஏற்காது. புதிய விசாரணைகள் நடத்தப்படமாட்டாது. ஐ.நா.வால் வெளியிப்பட்ட அறிக்கையில் புலிகளின் குற்றச் செயல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
புலிகள் சிறார்களை கொன்றனர். கர்ப்பிணிகளை- நிராயுத பாணிகளை ஆயிரக்கணக்கில் கொன்றுள்ளனர். அதையெல்லாம் ஐ.நா. விசாரணையாளர்கள் குறிப்பிடவில்லை. என்றும் ஹுலுகெல்ல குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே இலங்கையின் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ்- இந்த வீடியோ ஆதாரங்களை பரிசீலித்த நிபுணர்கள் சிலரது தகைமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
தவிர இந்த அறிக்கையைச் சமர்ப்பித்த ஐ.நா.நிபுணர்களின் ஆய்வுகள் பக்கச்சார்புடைவையாக அமைந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். (எம்.ரி.௯77)
