பொது மக்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்படாதவாறே படையினர் செயற்பட்டனர்!

confrerence

யுத்த அனுபவம் மாநாட்டில் கட்டளைத் தளபதிகள் விளக்கம்

இலங்கையில் இருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு சரியான அரசியல் தலைமைத்துவமும் பாதுகாப்பு படையினரின் அர்ப்பணிப்புமே காரணமென்று புலிகளுக்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட கட்டளைத்தளபதிகள் தெரிவித்தனர்.
புலிகள் அப்பாவி பொது மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி வந்த போதிலும் சகல சந்தர்ப்பங்களிலும் பாதுகாப்பு படையினர் பொதுமக்களுக்கு எதுவித பாதிப்பும் உயிர்ச்சேதமும் ஏற்படாத வகையிலேயே செயற்பட்டு வந்ததாக 41 நாடுகளின் இராணுவஇ பாதுகாப்பு உயர் அதிகாரிகள் மத்தியில் விளக்கமளித்தனர்.


பயங்கரவாத ஒழிப்பு மற்றும் இலங்கையின் அனுபவம் என்ற தொனிப்பொருளில் இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்த மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கின் இரண்டாவது நாளான நேற்றைய தினம் நடைபெற்ற முதல் அமர்வில் பாதுகாப்பு படை வீரர்கள் தத்தமது களமுனை அனுபவங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
மனிதாபிமான நடவடிக்கை என்ற தலைப்பில் மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் வடக்கு மற்றும் கிழக்கு மனிதாபிமான நடவடிக்கையின் போது இராணுவக் கட்டளைத் தளபதிகளாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் சாகி கால்லகே- மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ்- மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா- மற்றும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா ஆகியோர் நேற்றைய அமர்வில் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட கொடூரத் தன்மைகளையும்- தாக்குதல்களையும்- மேற்படி பேச்சாளர்கள் அனைவரும் தமது உரைகளின் போது சுட்டிக்காட்டினர்.
புலிகள் இராணுவ நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு வலயங்களை தவறாக பயன்படுத்தியமை- தமிழ்மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியமை- சிறுவயதினரை இராணுவ நடவடிக்கைக்களுக்காக ஈடுபடுத்தியமை- சிவிலியன்கள்- இராணுவத்தினர் மீது புலிகள் தாக்குதல் நடத்தியமை அரசியல் தலைவர்களை- முக்கியஸ்தர்களை கொலை செய்தமை போன்ற புலிகளின் கொடூரத்தன்மைகள் தொடர்பாகவும் புள்ளிவிபரங்கள்- புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளுடன் விளக்கமளித்தனர்.
கருணா அம்மானின் ஒத்துழைப்பு எந்தளவு பெறப்பட்டது என்று வெளிநாட்டு இராணுவ அதிகாரி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மேஜர் ஜெனரல் சாகி கால்லகே- கருணா தரப்பிலிருந்து செயற்பாட்டு மட்டத்திலோ- தந்திரோபாய மட்டத்திலோ எதுவித உதவிகளும் பெறவில்லையென்று பதிலளித்தார்.
வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் அமெரிக்க இராணுவ அதிகாரி இந்த அமர்வின் போது கேள்வி எழுப்பினார். இதற்கு 58வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதியாக செயற்பட்ட ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிட பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பதிலளிக்கையில்-
இலங்கை இராணுவம் மிகவும் ஒழுக்கமுள்ள படையாகும். சகல சந்தர்ப்பங்களிலும் அப்பாவி பொதுமக்களின் நலன் கருதியே செயற்பட்டு வந்தது. மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக்கட்டத்தில் என்ன நடந்தது என்பன தொடர்பான விடயம் தற்பொழுது நீதிமன்றம் முன்னுள்ளது.
நான் இலங்கை பிரஜை என்ற வகையில் நீதிமன்றில் உள்ள ஒரு விடயத்திற்கு இந்த இடத்தில் எந்தவொரு கருத்தும் சொல்ல முடியாது. ஏனெனில் நீதிமன்றுக்கு கெளரவம் கொடுக்க வேண்டியது எனது கடமையாகும் என்று தெரிவித்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா- இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக சரியான தீர்ப்பு வெகுவிரைவில் கிடைக்குமென நான் நம்புகிறேன் என்று குறிப்பிட்டார்.(எம்.ரி.-977)