ஐ.தே.க.தலைமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

ranil

உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் ஆயத்தம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை நடாத்துவதற்கு சஜித் பிரேமதாச அணியினர் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரியவருகின்றது.

ஐ. தே. க. வின் சிறிகொத்தா தலைமையகத்திற்கு அருகில் நாளை மறுதினம் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐ.தே.க.வின் விஷேட செயற்குழுக் கூட்டம் 17ம் திகதி சிறிகொத்தாவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருக்கும் கட்சி தலைமைத்துவம் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க சரியான தீர்வைப் பெற்றுத் தரத் தவறுவாராயின் அதற்கு எதிராக சாகும் வரையும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்க விருப்பதாக அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.

கட்சி தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க வெளியேறும் வரையும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் காணப்பட்ட இணக்கப்பாட்டுக்கு ஏற்ப கட்சித் தலைவராக கரு ஜயசூரியாவை நியமிப்பதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். எதிர்வரும் நாட்களில் அந்த யோசனைக்கு மக்கள் பிரதிநிதிகள் சகலரும் அங்கீகாரம் வழங்குவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் தலைமையை கட்சியின் செயற்குழு இணக்கப்பாட்டின் ஊடாகவே மாற்ற முடியும். அதனால் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் கட்சி மாநாடு வரை பொறுத்திருப்பது அவசியம் என்றும் கூறப்படுகின்றது. (எஸ்.டி.எம்.ஐ)

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2011 11:29 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது