சந்தேக நபர் கொழும்பில் கைது
யாழ் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபரை பொலிஸார் நேற்றுக் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வந்த விசேட பொலிஸ் குழுவினரே களுபோவில ஆஸ்பத்திரியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னவன் என்று அழைக்கப்படும் ரத்ணசிங்கம் சந்திரகுமார் 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி சில்வா தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்றும் பாதாள உலகத்தைச் சேர்ந்த முக்கிய நபர் எனவும் அவர் தெரிவித்தார்.
களுபோவில வைத்திய சாலையில் வைத்து கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரிடம் நடத்திய ஆரம்ப கட்டவிசாரணையை அடுத்து இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் தலைமறைவாகியுள்ளமை தெரியவந்துள்ளது. இரண்டாவது சந்தேக நபரை கைது செய்வதற்காக மற்றுமொரு விசேட பொலிஸ் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டு ள்ளதாகவும் வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் வீடொன்றை கொள்ளையடிக்க முயன்ற போது பிரதேச மக்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இவர் களுபோவில வைத்தியசாலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளைஇ தமக்கு எதிராக செய்தி எழுதுவதால்இ அவரைத் தாக்குமாறு வேறொரு நபர் இவருக்கு ஒப்பந்தம் கொடுத்ததாக சந் தேக நபர் பொலிஸில் ஒப்புக்கொண்டதாக வும் ஒப்பந்தம் வழங்கியவர்களைத் தேடிப் பொலிஸார் வலைவிரித்துள்ள தாகவும் சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் கூறினார்.
வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கும் சந்தேக நபருக்கு பொலிஸ் காவல் வழங்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளுக்குப் பின்னர் நீதிமன்ற உத்தரவைப் பெற்று சிறைச்சாலைக்கு மாற்றப்படுவார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். (எஸ்.டி.எம்.ஐ)
