வரலாற்றுப் புகழ்மிக்க மடு திருவிழா !

mdufeast

3 இலட்சத்துக்கும்  மேற்பட்ட  பக்தர்கள்

வரலாற்றுப் புகழ்மிக்க மடுமாதா கோவில்  ஆவணித் திருவிழா நேற்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

பேராயர் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகையின் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

நாடளாவிய ரீதியிலிருந்து சுமார் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள்  நேற்றைய திருவிழா நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

நேற்றுக் காலை 8.00 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. பேராயரின் தலைமையில் தமிழ் சிங்களம் லத்தீன் மொழிகளில் நிறைவேற்ற இத்திருப்பலியினை மன்னார் ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை  அனுராதபுரம் ஆயர் பேரருட்திரு நோபர்ட் அந்நாதி ஆண்டகை  திருமலை – மட்டக்களப்பு மறை மாவட்ட துணை ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை ஆகியோர் இணைந்து கூட்டுத் திருப்பலியாக நிறைவேற்றினர்.

திருவிழா திருப்பலியில் பெருமளவிலான குருக்கள் கன்னியாஸ்திரிகள்  அருட் சகோதரர்கள் மற்றும் அமைச்சர்கள்  பாராளுமன்ற உறுப்பினர்கள்  முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

திருவிழா திருப்பலியையடுத்து மருதமடு அன்னையின் திருச்சொரூப பவனி இடம்பெற்றது.

மடுத் திருப்பதியின் வழமையான வீதிகளில் திருப்பவனி வலம் வந்ததுடன்  திருச்சுரூப சுற்றுப் பிரகாரத்தையடுத்து இறுதி ஆசீர்வாதத்துடன் திருவிழா நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.

மடுத் திருத்தல ஆவணித் திருவிழா கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து நவநாள் ஆராதனைகளும் மறையுரைகளும் குணமாக்கல் சடங்குகளும் இடம்பெற்ற துடன்  14 ஆம் திகதி மாலை வெஸ்பர்ஸ் ஆராதனை நடைபெற்றது.

மடுத்திருப்பதி பிரதேசத்தில் கடும் மழைபெய்த போதும் பெருந்திரளான மக்கள் வெஸ்பர்ஸ் ஆராதனையில் கலந்துகொண்டதாக மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்திரு விக்ரர் சோசை அடிகளார் தெரிவித்தார். (எஸ்.டி.எம்.ஐ)

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2011 11:08 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது