உண்ணாவிரத இடத்திற்கு செல்வதற்கு முன்பாக
இந்தியாவில் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முற்பட்ட சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று காலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உண்ணாவிரத இடத்திற்கு செல்வதற்கு முன்பாக டெல்லி பொலிசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.
அன்னா ஹசாரேவோடு சமூக ஆர்வலர்கள் அரவிந்த் கேஜரிவால் கிரண்பேடி மற்றும் மனீஷ் சிசோதியா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
வலுவான லோக்பால் மசோதாவை உருவாக்கக் கோரி இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்திருந்தார்.
டெல்லியில் ஜந்தர் மந்தர் அருகே அவர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரியிருந்தார். எனினும் டெல்லி கிரிக்கெட் மைதானம் அருகே உள்ள ஜெயபிரகாஷ் நாராயண் மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்க டெல்லி பொலீஸ் அனுமதி அளித்தது.
மேலும் உண்ணாவிரதம் தொடர்பாக 22 நிபந்தனைகளையும் விதித்திருந்தது. இதில் 6 நிபந்தனைகளை அன்னா ஹசாரே குழு ஏற்கவில்லை.இதனையடுத்து உண்ணாவிரதம் நடத்த டெல்லி பொலிஸ் அனுமதி மறுத்தது. மேலும் ஜெயபிரகாஷ் நாராயண் மைதானத்தை சுற்றியுள்ள பகுதியில் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று கூறிய அன்னா ஹசாரே தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.அதன்படி இன்று காலை அவர் உண்ணாவிரதப் போராட்டத்திற்காக தயாராகி கொண்டிருந்தார்.
கிழக்கு டெல்லியில் அவர் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கணக்கான சமூக ஆர்வலர்கள் திரண்டிருந்தனர்.
இதனிடையே உண்ணாவிரத இடத்திற்கு அவர் செல்வதற்கு முன்பாகவே டெல்லி பொலிசார் அவரை கைது செய்தனர். (எஸ்.டி.எம்.ஐ.)
