பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையை மீளவும் இயக்க நடவடிக்கை!

Duglas-19

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி

பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையை மீளவும் இயக்கி அதனூடாகவும் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை  ஊடாகவும் டிப்ளோமா பயிற்சி நெறியை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென பாராம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் கடமையாற்றும் ஆசிரிய உதவியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாகப் பணியாற்றி வந்தவர்கள் கடந்த 2009ஆம் ஆண்டு அரசினால் ஆசிரிய உதவியாளர்களாக உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவாக மூவாயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருவதை அவர்கள் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

இந்நிலையில் தமக்கான நிரந்தர நியமனம் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளுக்கு உள்வாங்குவது தொடர்பாகவும் அமைச்சர் அவர்களிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கோரிக்கைகளை ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா- கல்வியமைச்சிற்கு இப்பிரச்சினை எடுத்துரைக்கப்பட்டதாகவும் கல்வியமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும் போது இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாட இருப்பதாகவும் தெரிவித்தார்.(எம்.ரி.-977)

திங்கட்கிழமை, 19 செப்டம்பர் 2011 15:36 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது