நீதியமைச்சர் ஹக்கீம் கிளிநொச்சியில் தெரிவிப்பு
வடக்கு மக்களுக்கு நீதிச் சேவையை காலடிக்குக் கொண்டு வந்து வழங்கும் வாய்ப்பு அரசாங்கத்தினால் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கிளிநொச்சியில் தெரிவித்தார்.
கிளிநொச்சி நகரில் புதிதாக அமைக்கப்பட்ட மாவட்ட நீதிமன்றம் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களைத் திறந்து வைக்கும் நேற்றைய நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.மேற்படி நீதிமன்றங்களை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்காக அமைச்சர் ஹக்கீம் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஆகியோர் நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்தனர்.
வடக்கில் புலிகளின் வசமிருந்த நீதிமன்றங்களை மீண்டும் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளது. நீதிச் சேவையை விரிவுபடுத்தி மக்களுக்கு அதன் மூலமான நன்மைகளை துரிதமாகப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் நாடளாவிய ரீதியில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள சுற்றுலா நீதிமன்றத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்காக பூநகரியில் சுற்றுலா நீதிமன்றமொன்றை அமைக்க உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (எஸ்.டி.எம்.ஐ)
