மேலதிக அரிசி ஆபிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி!

rice_export

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

இலங்கையில் தேவைக்கு மேலதிகமாகவுள்ள அரிசியை ஆபிரிக்க நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு  பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களுடன் தாம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் போது இலங்கையிலிருந்து அரிசியைக் கொள்வனவு செய்வதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி- இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப் படுத்துவதற்கான விசேட தெரிவுக் குழுவின் அமர்வு நேற்று முன்தினம் அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாம் நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 66 வது பொதுக் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட போது ஆபிரிக்க நாடுகளின் தலை வர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குறிப்பிட்டார். இதன் போது அத்தலைவர்கள் தமது நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்யுமாறு தம்மைக் கேட்டுக் கொண்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன்- எதிர்வரும் பண்டி கைக்காலங்களில் தேவையான சகல உணவுப் பொருட்களையும் கட்டுப் பாடின்றி பெற்றுக் கொடுப்பதிலும் அப்பொருட்களின் விலைகள் அதிகரிக்காமல் அதனைக் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பதிலும் கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி உரிய அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

அதேவேளை- பால்மாவுக்கு நியாயமான விலையை அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி-அதனை நிலையாக வைத்துக் கொள்வது தொடர்பில் பால் மா நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

நாடளாவிய ரீதியில் நெல் அறுவடை இடம்பெறுகின்றது. இம்முறை விவசாயிகளிடமிருந்து சகல நெல்லையும் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு வடக்கு- கிழக்கில் மீண்டும் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் தேவைக்கு மேலதிகமான அரிசி அரசாங்கத்தின் கையிருப்பில் உள்ளது.

இதனை ஆபிரிக்க நாடுகளுக்கு விற்பனை செய்வது தொடர்பிலேயே ஜனாதிபதி உரிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளார். இந்நிகழ்வில்- அமைச்சர்க ள் பஷில் ராஜபக்ஷ- ராஜித சேனாரத்ன- மஹிந்த யாப்பா அபேவர்தன- எஸ். பி. நாவின்ன- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். (எம்.ரி.-977)