முஸ்லிம் பிரதிநிதிகள் மத்தியில் ஜனாதிபதி
பொய் வதந்திகளை நம்பி ஏமாறாமல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை அமோக வெற்றிபெறச் செய்து நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்பு செய்யுங்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.சுற்றாடல் பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் தலைமையில் அவரது கண்டி வாசஸ்தலத்தில் நடைபெற்ற முஸ்லிம் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில்- அன்று முஸ்லிம் வியாபாரிகள் வியாபாரம் நடப்பதில்லை என்றும் எங்கும் அச்சம் நிலவுவதால் மக்கள் நகருக்கு வருவது குறைந்துள்ளது என்றும் கூறினார்கள். நாம் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து அந்த அச்ச நிலையைப் போக்கியுள்ளோம். இப்போது மக்கள் அச்சம்- பீதியின்றி நடமாடுகின்றார்கள். வியாபாரமும் நல்லபடி நடக்கின்றது.
என்றாலும் இப்போது தேர்தல் நடக்கின்றது. உங்கள் நகரை அபிவிருத்தி செய்வதற்கு மிகவும் அவசியமான தேர்தல் இது. அதனால் உங்களது எதிர்கால சந்ததியினரதும் நலன்களை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுங்கள். சிந்தித்து செயற்படுங்கள்.
வரலாற்று சிறப்புமிக்க மாநகரம் இருந்தும் இங்கு ஒழுங்கு முறையாக கழிவுப் பொருட்கள் அகற்றப்படாதுள்ளது. இதனால் நகரின் பல பிரதேசங்களில் துர்நாற்றம் வீசுகின்றது. இப்பிரச்சினைக்கு மாநகரை ஆட்சி செய்பவர்களால் இற்றைவரையும் தீர்வு வழங்கப்படவில்லை. இனியும் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
ஆனால் நகர அபிவிருத்தி சபையை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்து கொழும்பு மாநகரின் கழிவுப் பொருள் பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளோம்.
மீன் சந்தையை கொழும்புக்கு வெளியே கொண்டு சென்றிருக்கின்றோம். ஆனால் ஐ.தே.க. கொழும்பு மாநகர சபை முதன்மை அபேட்சகர் மீண்டும் மீன் சந்தையை கொழும்புக்குள் கொண்டு வருவதாகக் கூறுகின்றார். அப்படியென்றால் கொழும்பு அழகாகவும் துர்நாற்றமின்றியும் இருப்பதும் இவருக்குப் பிடிக்கவில்லை போலும்.
நான் கண்டி முஸ்லிம்களுக்கு ஆண்கண் பாடசாலையொன்றைத் தருவதாகக் கூறினேன். இதற்காக ஸ்ரீல.சு. கட்சியில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை உருவாக்கித் தருமாறு அன்று கேட்டேன். ஆனால் ஒரு முஸ்லிம் ஸ்ரீல.சு. கட்சியில் எம்.பியாகவில்லை. இப்போது இருவர் பிரதியமைச்சர்களாக இருக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் களுத்துறையைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணி அலி சப்றி அண்மையில் ஒரு தொலைக்காட்சி கலந்துரையாடலில் தெரிவித்த கருத்துக்கள் என்னை பெரிதும் சிந்திக்க வைத்ததுதான். ஒரு முஸ்லிம் என்று முஸ்லிம் பாடசாலையிலேயே கற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் சட்டக் கல்லூரியில் இணைந்த பின்னர் தான் சிங்கள மொழியைக் கற்றேன். சிங்கள மொழி மாணவர்களுடன் கலந்து பழகும் வாய்ப்பும் கிடைத்தது என்றும் கூறினார்.
உண்மையில் எமது பிள்ளைகளைப் பாடசாலை பருவத்திலிருந்தே சிங்களம்- தமிழ்- முஸ்லிம் என்று பிரித்து வைத்திருக்கின்றோம். அவர்கள் வளர்ந்த பின்னர் தான் ஒன்றுபட்டு செயற்படுமாறு கூறுகின்றோம். ஆனால் றோயல் கல்லூரியில் மூன்று இன மாணவர்களும் ஒன்றாக கற்கின்றார்கள். அவரவர் சமய- கலாசார விழுமியங்களை அறிந்து உணர்ந்து மதித்து செயற்படுகின்றார்கள். நாம் சமூகத்தைப் பிரிக்கக் கூடாது.
பள்ளிவாசல்களில் அதான் கூறுவதை நாம் நிறுத்தவில்லை. அதற்கு வழி சமைத்தவர்கள்தான் ஐ.தே.க. மேடைகளில் இப்போது பேச்சாளராக இருக்கின்றார். நாம் பள்ளிவாசல்களை உடைக்கவில்லை. முஸ்லிம்களுக்கான கலாசார நிலையத்தை அமைத்திருக்கின்றோம். கிறிஸ் பூதம் என்ற வதந்தியைப் பரப்பினார்கள். என் மீது சேறு பூசப்பூச ஐ.தே.க.வும்- ஜே.வி.பி.யும் துண்டு துண்டாக உடைந்து பிரிந்து போய் விட்டது. நீங்கள் வதந்திகளை நம்பாதீர்கள். ஐ.ம.சு.முன்னணியை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.
இஸ்லாத்தின் அடிப்படையே சாந்தி சமாதானம்தான். உணர்வுகளுக்கு முதலிடம் கொடுக்காமல் புத்திக்கு முன்னுரிமை அளியுங்கள். எல்லா மக்களும் இந்நாட்டில் சுய கெளரவத்துடன் வாழ வேண்டும். கல்வி தான் எமது கண். அதற்கு முதலிடமளிப்பது மிக அவசியம். எல்லோரும் ஒன்று பட்டு நாட்டை அபிவிருத்தி செய்வோம் என்றார்.
இந்நிகழ்வில் பிரதமர் டி.எம். ஜயரட்ன- அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே- மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க- மாகாண சபை உறுப்பினர் அம்ஜாத் ஹாஜியார் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்(எம்.ரி.-977)
