அபிவிருத்தித் திட்டங்களில் உள்ள தவறுகளை ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்ட வேண்டும்!

Minister_1பதுளையில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

அரசாங்கம் நாட்டில் மேற்கொள்ளும் அபிவிருத்தித்திட்டங்களை செய்தியாக எழுதுவதை விட அந்த அபிவிருத்தித் திட்டங்களில் உள்ள தவறுகளையே ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்ட வேண்டும் என  நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அபிவிருத்தித்திட்டங்களில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் பதுளை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கருத்தரங்கில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

பசறை பொல்கஹதென்ன முகாமைத்துவப் பயிற்சி நிலையத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அதுகல தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இக்கருத்தரங்கில் அமைச்சர் மேலும் கூறியதாவது:

ஒரு பாடசாலை அமைக்கப்படுகின்றது என்ற செய்தியை விட பாடசாலையில் ஆசிரயர் பற்றாக்குறை மற்றும் வளப்பற்றாக்குறை என்பவற்றை செய்தியாக எழுதுவது சிறந்தது. தவறுகள் சுட்டிக்காட்டப்படும்போது நாம் எமது பணிகளை இன்றும் திறமையுடன் முன்னெடுக்க வழியேற்படுகின்றது.

எமது அமைச்சின்மூலம் நாம் பல்வேறு நற்பணிகளைப் புரிந்துள்ளோம். நீரப்பாசன வசதிகள் செய்துள்ளோம். மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காணிகளையும் வீடுகளையும் வழங்கியுள்ளோம்.

பதுளையில் நீச்சல் தடாகம் மற்றும் உள்ளக வசதிகளுடன் கூடிய மாபெரும் விளையாட்டு மைதானம் ஒன்றை விரைவில் அமைக்கவுள்ளோம் எனவும் அமைச்சர் கூறினார். (எம்.ரி.-977)

dg-1

journalist-1